இப்ப நிம்மதியா நியாயமாரே.. வைரல் பெண் டிரைவருக்கு பஸ் வேலை போச்சி..!
கோவையில் தனியார் பேருந்தினை ஓட்டி பிரபலமான பெண் ஓட்டுனரான சர்மிளாவின் பேருந்தில் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பயணம் செய்த நிலையில் தாம் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அப்பெண் ஓட்டுநர் கூறியுள்ளார்...
தமிழகத்திலேயே முதல் தனியார் பேருந்து ஓட்டுநர் என்று சமூக வலைதளங்களால் பிரபலமானவர் கோவை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரம் முதல் சோமனூர் வரையிலான வழித்தடம் எண் 20 A ல் இயக்கப்படும் வீ வீ எனும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் ஓட்டுநராக கடந்த மார்ச் மாதம் முதல் பணியாற்றி வந்தார். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.
திமுக துணை பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெள்ளியன்று காலை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியதுடன் அதே பேருந்தில் பீளமேடு வரை பயணம் செய்தார்.
அப்போது அப்பேருந்தில் பயிற்சி நடத்துநராக பணியில் இருந்த அன்னத்தாய் என்பவர், கனிமொழி உள்ளிட்டோரிடம் பயணச்சீட்டு எடுக்குமாறு கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் ஓட்டுநரான ஷர்மிளா ஏற்கனவே அவர்கள் டிக்கெட் எடுத்து விட்டதாகவும் அவர்களிடம் டிக்கெட் கேட்க வேண்டாம் எனவும் கூறியதாக சொல்லப்படுகின்றது.
பேருந்தில் பயணம் செய்த கனிமொழி பீளமேடு பகுதியில் இறங்கிய நிலையில் சம்பவம் பற்றி புகார் அளிப்பதற்காக ஷர்மிளா தமது தந்தை மகேஷை அழைத்துக் கொண்டு பேருந்து அலுவலகத்துக்குச் சென்றதாக தெரிகிறது. அங்கு இருந்த பேருந்தில் உரிமையாளர் துரைக்கண்ணன் விளம்பத்திற்காக பிரபலங்களை அழைத்து வரக் கூடாது என்று கூறியதாகவும் அதனால் துரைக்கண்ணனுக்கும் தமது தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் ஷர்மிளா கூறினார்.
உடனே பேருந்து உரிமையாளர், உனது பெண்ணை கூட்டிட்டு வெளியே போ... என கூறவே அங்கிருந்து வெளியேறியதாக ஷர்மிளா தெரிவித்தார்.
தான் காலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 1200 ரூபாய் வருமானத்திற்காக இந்த பேருந்தை ஓட்டி வந்ததாகவும் இப்படி அவமதித்து வெளியேற்றுவார்கள் என நான் நினைத்து பார்க்கவில்லை என கூறிய ஷர்மிளா தன்னால் பேருந்து வாங்க முடியாது ஆனால் ஆட்டோ,கேப் போன்றவற்றை வாங்கி ஓட்டி பிழைப்பு நடத்துவேன் என தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்....
பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு, தாங்கள் அவரை பணி நீக்கம் செய்யவில்லை என்றும் அப்பாவும் பொண்ணும் வந்து சத்தம் போட்டு பேசியதால் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு தான் சொன்னதாகவும், ஆனால் சம்பவத்தை மாற்றி வேறு விதமாக சொல்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
புதிதாக பேருந்தில் நியமிக்கப்பட்ட பெண் நடத்துநர் அன்னத்தாய்க்கும் சர்மிளாவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தான் பிரச்சினைக்கு காரணம் எனவும் துரைக்கண்ணன் விளக்கமளித்தார்.
பெண் நடத்துனர் அண்ணாத்தாய் கூறும் போது, தான் கனிமொழி அவர்களிடம் டிக்கெட் கேட்டது சர்மிளாவுக்கு பிடிக்கவில்லை என்றும் அதை கண்டித்து தங்களுடன் சண்டையிட்டு பேருந்தை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு வரவில்லை என கிளம்பிவிட்டதாகவும் கூறினார்.
Comments